கொங்கு மண்டலத்தின் முக்கிய முகமான சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சேனாபதி, மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
2021 சட்டமன்ற தேர்தல்களுக்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் மும்முரமாக செய்து வருகின்றன. இந்த தேர்தலில் அதிமுகவை, அதன் கோட்டையான கொங்கு மண்டலத்தில் வீழ்த்த வேண்டும் என திமுக திட்டமிட்டுள்ளது. இதற்காக பல காய் நகர்த்தல்களை திமுக மேற்கொண்டு வருகிறது.
.
கரூர் மற்றும் நீலகிரியை தவிர்த்து மற்ற கொங்கு மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகியவற்றில் திமுக சற்று பலவீனமாகவே உள்ளது. இந்த பலவீனம் இன்றோ, நேற்றோ உருவானதல்ல. கருணாநிதி காலத்தில் இருந்தே இந்த மண்டலத்தில் கள யதார்த்தம் இது தான்.
இதனால், கொங்கு மண்டலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்க திமுக முயற்சித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கொங்கு மண்டலத்தின் முக்கிய முகமான கார்த்திகேய சேனாபதியை கட்சியில் இணைந்துள்ளது திமுக.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சேனாபதி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருக்கு கட்சியின் உறுப்பினர் அட்டையை ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் பேசிய கார்த்திகேய சேனாபதி,” திமுக ஆட்சியில் கொங்கு மண்டலத்திற்கு கிடைத்த நன்மைகளை எடுத்துரைப்பதே எனது குறிக்கோள். 1950களில் அப்போதைய காங்கிரஸ் அரசு கொங்கு வெள்ளாளர் சமூகத்தை விடுத்து, முக்குலத்தோர் மற்றும் வன்னியர் சமூகங்களை மட்டுமே பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்தது.1974ம் ஆண்டில் கருணாநிதி ஆட்சியில் தான் கொங்கு வெள்ளாளர் சமூகம் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கப்பட்டது.” என்றார்.