தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திமுக தொகுதி பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் ஆகிய பணிகள் ஒருபுறமும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி, பிரசார வியூகம் அமைக்கும் பணி மறுபுறமும் நடந்த வருகிறது.
தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் திமுக சார்பில் திருச்சியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், அடுத்தது திமுக ஆட்சிதான் அமைய போகிறது. பெரியார், அண்ணா, கருணாநிதி, காமராஜர், தோழர் ஜீவா உள்ளிட்ட தலைவர்கள் விரும்பிய ஆட்சியாக அமையும். தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.4 லட்சமாக அதிகரிக்கப்படும், 10 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்டும்.

கல்வி சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீடு மூன்று மடங்காக உயர்த்தப்படும். பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை இரட்டிப்பாக வழங்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் தொலை நோக்கு திட்டங்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் படிப்படியாக அமல்படுத்தப்படும் என கூறினார்.
இல்லத்தரசிகளுக்கு உதவித் தொகையை முதலில் மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன்தான் முன்மொழிந்தார். இருப்பினும் அதை ஸ்டாலின் குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகையாக ரூ.1000 என அறிவித்தார். இது எந்தளவு சாத்தியம் என தெரியவில்லை என்றாலும் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு பலரையும் கவர்ந்துள்ளது என்றே கூறலாம்.
திமுக வருகிற 11 ஆம் தேர்தல் அறிக்கையை வெளியிட இருக்கிறது. தமிழக மக்களின் விடியலுக்கான திட்டங்களுடன் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது எனவும் மக்களால் மக்களுக்காகவே உருவான திமுக தேர்தல் அறிக்கை தேர்தலில் கதாநாயகனாக இருக்கும் எனவும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.