சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் மீண்டும் மாணவர்களை கவரும் அதிரடி திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கல்வி விவகாரத்தில் தொடர்ந்து குழப்பமான முடிவுகளை எடுத்தாலும், ‘மாணவர்களின் மனிதக் கடவுளே’ போன்ற வர்ணனைகளை போஸ்டர்களில் பெற்று வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இறுதி நேரத்தில் அறிவிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ், அரியர் மாணவர்கள் தேர்ச்சி உள்ளிட்ட அண்மை முடிவுகள் இதற்கு சிறந்த உதாரணம்.
இருப்பினும், இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல், அடுத்தடுத்த அறிவிப்புகளை அடுக்கி வருகிறது தமிழக அரசு. மாவட்டங்களை பிரித்து கூறுபோடுவதற்கு பெயர்போன எடப்பாடி அரசாங்கம், சமீபத்தில் பல்கலைக்கழகங்களை உடைத்து வருகிறது.
தேசிய அளவில் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், பிற பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்கும் ஒரு பிரிவுக்கு அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயர் தொடரும் என்றும், மற்றொன்றிக்கு அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, 110 விதிகளின் கீழ், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். புதிய பல்கலைக்கழகம் விழுப்புரத்தில் அமைக்கப்படும் என்றும், பின்தங்கிய மாவட்டங்களான விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் இந்த பல்கலைக் கழகம் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
வன்னியர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் விழுப்புரம் மாவட்டத்தில், 2021 சட்டப்பேரவை தேர்தல்களுக்கான காய் நகர்த்தல்கள் கடந்த ஆண்டே தொடங்கிவிட்டது என்றே கூற வேண்டும். இடைத்தேர்தலில் திமுகவிடம் இருந்து விக்கரவாண்டி தொகுதியை கைப்பற்றியதை போல், பாமகவின் உதவியுடன் விழுப்புரத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் வெற்றி பெற சி.வி.சண்முகம் கணக்குபோட்டு வருகிறார்.
அதன்படி, ஒருபுறம் பாமகவுடன் நெருங்கிய உறவில் இருந்து வரும் சி.வி.சண்முகம், தனது மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில், விழுப்புரத்தில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு சி.வி.சண்முகம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோரிக்கை வைத்தார்.
இதன் அடிப்படையிலேயே முதலமைச்சர் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை பிரிக்க வன்னியர் சமூகத்தை சேர்ந்த திமுக எம்.எல்.ஏ. துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்தார். திமுகவின் இந்த எதிர்ப்பு, விழுப்புரத்தில் அதிமுக கூட்டணிக்கு உதவும் என்றே நம்பப்படுகிறது.