அதிமுகவில் எழுந்துள்ள உட்கட்சி பூசல் காரணமாக துணை முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்ற சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ளது. ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற செயற்குழு கூட்டம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டத்தில், இ.பி.எஸும், ஓ.பி.எஸும் காரசார விவதாகங்களில் ஈடுபட்டனர். இருதரப்பினரும் அவரவர் கோரிக்கைகளில் பிடிப்புடன் இருந்தனர்.
இதனால், கட்சிக்குள் வெளிப்படையான அணிகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. செயற்குழு கூட்டம் நடந்த அன்றே துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட பல நிர்வாகிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினர். நேற்று காலை கே.பி.முனுசாமி, முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்று பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
இதனிடையே, நேற்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனை கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் புறக்கணித்தார். மேலும், சென்னை மாநகராட்சி சார்பில் இன்று நடைபெற்ற அரசு திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க விழா அழைப்பிதழில் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் விடுபட்டுள்ளது.
இந்தநிலையில், தனது காரில் இருந்த தேசிய கொடியை ஓ.பன்னீர்செல்வம் அகற்றி உள்ளார். இதனால், அவர் துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றை போல், இன்றும் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
தேர்தல் நெருங்கும் தருவாயில் துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தால் அவருக்கு ஆதரவாக அனுதாப அலை உருவாகும் என்று ஒருதரப்பு கூறுகிறது. அதேசமயம், பதவி ஆசையில் காய் நகர்த்தினால் அது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.