மத்தியில் ஆட்சி அமைத்ததில் இருந்து பொருளாதாரம் மற்றும் வரி தொடர்பான பல்வேறு சீர்திருத்தங்களை பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டின் பட்ஜெட் தாக்கலின் போது, வரி நிர்வாகத்தில் முக்கிய சீர்திருத்தம் கொண்டு வரப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மனித தலையீடு இன்றி, மின்னணு மதிப்பீட்டு முறையை அமல்படுத்துவது குறித்து பேசினார். இது வரி செலுத்துவோர் மீதான துன்புறுத்தல் மற்றும் ஊழலின் வாய்ப்புகளை குறைக்கும் எனவும் கூறினார்.
மத்திய அரசின் சீர்திருத்தங்கள்:
இதனடிப்படையில், வரி செலுத்துவோரை கவுரவிக்கும் வகையில், வெளிப்படையான வரிவிதிப்பு மற்றும் நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்துள்ளார். அப்போது பேசிய அவர், மத்திய அரசின் சீர்திருத்தங்கள் புதிய உயரங்களை எட்டியுள்ளது. இந்த சீர்திருத்தங்கள் வரி முறையை எளிமைப்படுத்தும் எங்களின் முயற்சிகளை வலுப்படுத்தும். கடந்த ஆறு ஆண்டுகளில், வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 25 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது ஒரு பெரிய முன்னேற்றம். ஆனால், 130 கோடி மக்கள் வாழும் நாட்டில் இது மிகக் குறைவு என்பதை நாம் மறுக்க முடியாது. இன்று நான் மக்களிடமும், தொழில்துறை அமைப்புகளிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன். இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்றும் பொறுப்பு அரசுக்கு மட்டுமில்லை, வரி செலுத்தக்கூடியவர்களும் உண்டு. இதனால், அனைவரும் தானாக முன்வந்து வரி செலுத்த வேண்டும், என்றார்.
இந்த திட்டத்தில் முகமற்ற மதிப்பீடு, முகமற்ற முறையீடுகள், வரி செலுத்துவோர் சாசனம் ஆகிய மூன்று அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
முகமற்ற மதிப்பீடு
முகமற்ற மதிப்பீட்டு திட்டத்தின் கீழ், எந்த வருமான வரி கணக்கை ஆராய்வது என்பதை அரசு அதிகாரிகள் தீர்மானிக்கும் முறையை அகற்ற அரசாங்கம் முயல்கிறது. தரவு பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற கருவிகளின் உதவியுடன் வருமான கணக்கு ஆராயப்படும். வரி செலுத்துவோர் வசிக்கும் பகுதியில் வழக்குகள் ஆராயப்படாமல், வேறு இடங்களுக்கு தோராயமாக ஒதுக்கப்படும். மதிப்பீட்டின் போது வரி செலுத்துவோர் வருமான வரி அலுவலகம் அல்லது அதிகாரியை பார்வையிட தேவையில்லை. மேலும், வரி செலுத்துவோரின் துன்புறுத்தலை குறைக்கும் வகையில், மதிப்பீட்டு வரைவு, மறுஆய்வு மற்றும் இறுதி செய்தல் வெவ்வேறு நகரங்களில் வெவ்வேறு குழுக்களால் மேற்கொள்ளப்படும்.
முகமற்ற முறையீடுகள்
செப்டம்பர் 25ம் தேதி முதல் வரி செலுத்துவோர் டிஜிட்டல் முறையில் முறையீடுகளை தாக்கல் செய்யக்கூடிய முறை அமல்படுத்தப்படுகிறது. வரி செலுத்துவோர் மதிப்பீட்டு உத்தரவுக்கு மேல்முறையீடு செய்தால், மேல்முறையீட்டு அதிகாரி நாட்டின் எந்த பகுதியிலிருந்தும் தோராயமாக ஒதுக்கப்படுவார். அதிகாரியின் மீது தேவையற்ற செல்வாக்கு அல்லது அழுத்தத்தைத் தடுக்க அவரது அடையாளம் ரகசியமாக வைக்கப்படும். மேல்முறையீட்டு முடிவும் ஒரு குழுவால் எடுக்கப்பட்டு பின்னர் மதிப்பாய்வு செய்யப்படும். இந்த முகமற்ற மதிப்பீட்டுத் திட்டம் பெரிய மோசடிகள், மற்றும் பெரிய வரி ஏய்ப்புகளுக்கு பொருந்தாது.
வரி செலுத்துவோர் சாசனம்
வரி செலுத்துவோரின் சாசனம் வருமான வரித் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. நியாயமான மற்றும் நேர்மையான மதிப்பீடு, முறையீடு மற்றும் மறுஆய்வு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சாசனத்தில் வரி செலுத்துவோரின் உரிமைகளும், பொறுப்புகளும் இடம்பெற்றுள்ளன.