2021 ஜனவரியில் கட்சி; முதல்வர் வேட்பாளர் ரஜினி – ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன?
சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார்.
கொரோனாவுக்கு முன் ஓரளவுக்காவது அரசியல் குறித்து கருத்து தெரிவித்து வந்த நடிகர் ரஜினிகாந்த், வைரஸ் தொற்று பரவலுக்கு பின் வெளியில் தலை காட்டாமல் தனித்து இருந்து வந்தார். வயது முதிர்வு, உடல்நல பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால், 2021ம் சட்டப்பேரவை தேர்தலுக்குள் அவர் கட்சி தொடங்குவாரா என கேள்வி எழுந்தது.
இதனிடையே, ரஜினியின் உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில் கடிதம் ஒன்று பரவியது. ரஜினி கட்சி தொடங்குவது சந்தேகமே என்று பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டார். அதில், அந்த கடிதத்திற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில தகவல்கள் உண்மையானவை எனவும் அவர் ஒப்புக் கொண்டார்.
மேலும், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து, மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவை அறிவிப்பேன் எனவும் தெரிவித்திருந்தார்.அதன்படி, சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில், மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் போது, கட்சி தொடங்கினால் தற்போதைய சூழலில் வரவேற்பு எப்படி இருக்கும்? என ரஜினிகாந்த் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதற்கு, உடனடியாக கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்றும், கட்சி ஆரம்பித்தால் நீங்கள்தான் முதலமைச்சர் வேட்பாளராக இருக்க வேண்டும் எனவும், ரசிகர்கள் வலியுறுத்தியாக சொல்லப்படுகிறது.
மேலும், மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்றும், அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நான் முடிவெடுக்கிறேன்; அதுவரை பொறுத்திருங்கள் எனவும் ரஜினி கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதைத்தொடர்ந்து, ஆலோசனை கூட்டத்தை முடிந்துவிட்டு போயஸ்கார்டன் திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், அரசியல் பிரவேசம் குறித்த எனது முடிவை எவ்வளவு விரையில் முடியுமோ அவ்வளவு விரைவில் அறிவிப்பேன் என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.