ரஜினியுடன் அதிமுக கூட்டணியா?– ஓ.பி.எஸ். சொன்னது என்ன
ஜனவரியில் கட்சி தொடங்கவுள்ள நடிகர் ரஜினியுன் கூட்டணி அமைப்பது தொடர்பாக, துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.
ஜனவரியில் கட்சி தொடங்க இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார். மேலும், பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்த அர்ஜுனமூர்த்தியை, கட்சிக்குள் தலைமை பொறுப்பு வழங்கி இழுத்துள்ளார். ரஜினியின் அறிவிப்பை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சூழலில் ரஜினி யாருடன் கூட்டணி அமைப்பார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, ரஜினி கட்சிக்கு நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ பாஜக ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வீரபாண்டி அருகே உள்ள தப்புகுண்டு பகுதியில் அமைய இருக்கும் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இடத்தை நேரடியாக ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ,” நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதை வரவேற்கிறேன், அவரது வரவு நல்வரவாகட்டும். வாய்ப்பிருந்தால் ரஜினியுடன் கூட்டணி அமைக்கப்படும். அரசியலில் எது வேண்டுமானாலும் நிகழலாம்”, என்று கூறினார்.