பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் அக்டோபர் நான்காம் தேதி ஒளிபரப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் கலந்து கொள்வதற்கான புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒருபுறம் பிக்பாஸ், மறுபுறம் ஐபிஎல் என இரண்டு முன்னணி நிகழ்வுகள் டிவியில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாக உள்ளன.
கொரோனா பரவலுக்கு மத்தியில் பல்வேறு விதிமுறைகளோடு ஐபிஎல் ஆரம்பமாகி பலத்த வரவேற்போடு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ஐபிஎல் தொடரில் நேரடியாக பார்ப்பதற்கு பார்வையாளர்களை அனுமதிக்கவில்லை எனவே அனைவரும் நேரடி ஒளிபரப்பிலேயே பார்த்து வருகின்றனர்.
இந்தநிலையில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் ஆரம்பத்தில் தொடங்கும் எனவும் தேதி அக்டோபர் நான்காம் ஆக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பிக்பாஸ் சீசன் நான்கிற்கான புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 100 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் முன்னதாக 16 பேர் பங்குபெற்றனர். ஆனால் தற்போது 12 பேர் மட்டுமே பங்குப் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு பிக்பாஸ் இந்தியில் விதிக்கப்பட்டதுபோல் டபுள் பெட் வசதி இருக்கக் கூடாது எனவும் தட்டு, கண்ணாடி போன்ற பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பிக்பாஸ் தமிழிலும் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட வேண்டும். கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்ட அனைவரும் ஒரு வாரம் அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் பல விதிமுறைகள் இந்த பிக்பாஸ் சீசனில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.