காங்கிரஸுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
2021 சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டன. இந்த சூழலில், அதிமுக கட்சிக்குள்ளும், கூட்டணிக்குள்ளும் இருக்கும் விரிசல்கள் பொது வெளியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. யார் முதல்வர் என்ற உட்கட்சி பூசல் முடிவதற்குள், கூட்டணி ஆட்சி, தனித்துப் போட்டி என பாஜகவும், தேமுதிகவும் அதிக தொகுதிகளை பெற காய் நகர்த்தி வருகின்றன.
இதனிடையே, அதிமுக கூட்டணியில் தான் அப்படி, எங்கள் கூட்டணி வலுவாகவும், ஒற்றுமையுடனும் இருப்பதாக திமுக தோழமை கட்சிகள் மார்தட்டி கொண்டு வந்தன. ஆனால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காங்கிரஸுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
இது தொடர்பான நகலும் வெளியிடப்பட்டது. அதில், “காங்கிரஸ் கட்சிக்கு துணை முதலமைச்சர் பதவி தர வேண்டும் என்று செயற்குழுவில் குரல் எழுப்பப்பட்டது. இதை மாநில தலைமைக்கு பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் திமுக-காங்கிரஸ் கட்சிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், இதற்கு சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீரபாண்டியன் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு துணை முதலமைச்சர் பதவி கேட்டு எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. சில தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
துணை முதலமைச்சர் என்ற பதவி தமிழகத்திற்கு புதிதல்ல. ஆனால், அது என்றைக்கும் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டதே இல்லை. தமிழகத்தில் துணை முதலமைச்சர் என்ற பதவி 2009ம் ஆண்டு திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது. அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதியின் உடல்நிலை காரணமாக மு.க.ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரண்டாக உடைந்த அதிமுக கட்சியை ஒன்றிணைக்க மீண்டும் துணை முதலமைச்சர் பதவி கடந்த 2017ம் ஆண்டு தூசு தட்டி கொண்டுவரப்பட்டது. இதன் விளைவாக, தமிழகத்தின் இரண்டாவது துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.