கோயம்பேடு சந்தையால் தமிழகம் முழுவதும் வேகமெடுத்த கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு இன்று வரை முடிவில்லாமல் பரவி கொண்டிருக்கிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கிற்குள் ஊரடங்கு, ஊரடங்கின் தாக்கத்தை குறைக்க நிவாரண நிதி என தமிழக அரசு திக்குமுக்காடி வருகிறது.
இந்தநிலையில், நடப்பாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் – ஜூன்), அதாவது கொரோனா பொதுமுடக்கம் முழு வீச்சில் அமலில் இருந்த காலத்தில், தமிழக அரசு 50 சதவீத வருவாய் இழப்பை சந்தித்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டதால், பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகள் மீது வரி விதித்து வருவாயை பெருக்கிக் கொள்ளும் அதிகாரத்தை மாநில அரசுகள் இழந்தன. இந்த வருவாய் இழப்பீட்டை சரி செய்ய ஒப்புக்கொள்ளப்பட்ட தொகையையும் மத்திய அரசு உரிய நேரத்தில் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
இது கொரோனா காலத்தில் மாநில அரசுகளுக்கு பேர் இடியாக விழுந்துள்ளது. ஜிஎஸ்டியில் சேர்க்கப்படாத முத்திரை வரி, பதிவு கட்டணம், பெட்ரோல், டீசல் மீதான வாட் எனப்படும் மதிப்பு கூட்டு வரி, மின்சாரம், வாகனம், மது விற்பனை மீதான வரி மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஆனால், கொரோனா ஊரடங்கால், மக்கள் யாரும் பெருமளவில் வெளியே வராததால், பெட்ரோல் டீசல் மூலம் மாநில அரசுகள் ஈட்டி வந்த வருமானம் குறைந்துவிட்டது. பொதுமுடக்கம் காரணமாக மது விற்பனை, புதிய சொத்துகள், வாகனங்கள் மூலம் கிடைக்கும் பதிவு கட்டணம், வரி இல்லாமல் போய்விட்டது. குறிப்பாக மது விற்பனை மூலம் மட்டும் தமிழக அரசு ஆண்டிற்கு ஏறத்தாழ 22 சதவீத வருவாயை பெற்று வருகிறது. இந்த நெருக்கடியை சமாளிக்க பல்வேறு மாநில அரசுகள் அரசு ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்த நிலையில், சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு, அந்நடவடிக்கை தமிழக அரசு எடுக்கவில்லை. இந்த சூழலில் தான், ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்ட போது, உயர், உச்சநீதிமன்றங்களில் சட்டபோராட்டத்தை நடத்தி டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறக்க செய்தது.
இந்தநிலையில், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான தமிழக அரசின் வருவாய் தொடர்பான விவரங்கள் வெளியாகி இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் தமிழக அரசு 50 சதவீத வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு ₹25,082 கோடி வருவாய் ஈட்டப்பட்ட நிலையில், தற்போது வெறும் ₹12,318 கோடி மட்டுமே வருவாயாக வந்திருக்கிறது. பட்ஜெட் தாக்கலின் போது வெளியிடப்பட்ட மதிப்பீட்டின் படி பார்த்தால், தமிழக அரசு தற்போது 63% வருவாய் இழப்பை எதிர்கொண்டுள்ளது.
ஆனால், இந்த வீழ்ச்சிக்கு ஒரு மாற்றாக, எதை ஒழிப்போம் என வாக்குறுதி அளித்து ஆட்சி கட்டிலில் அதிமுக ஏறியதோ, அதே மதுவின் வருவாய் ஜூன் மாதத்தில் உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் ₹588 கோடி கிடைத்த நிலையில், தற்போது மது மூலம் ₹724 கோடி வருவாய் ஈட்டப்பட்டிருப்பது, மகிழ்ச்சிகரமான வருத்தமாக மாறி இருக்கிறது.