2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட பாஜக கூட்டணி வைக்கலாம் என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டன. திமுகவை பொறுத்தவரை கட்சியும், கூட்டணியும் வலுவாக இருப்பதாக கூறப்படுகிறது. மற்றொரு பக்கம் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதால், தொண்டர்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ” முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதிமுகவினர் ஒருங்கிணைந்து அறிவித்தது பாராட்டத்தக்கது.இதற்கு முதல்வலர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜக, அதிமுகவுடன் ஏற்படுத்திய கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக்கானது. அது உள்ளாட்சி மன்ற தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் நீடித்தது. சட்டமன்றத் தேர்தலுக்காக கூட்டணி குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும்.
தேர்தல் நெருங்கும் போது எங்களது கட்சியின் தலைமையிலோ அல்லது, மற்றொரு கட்சியின் தலைமையிலோ கூட்டணி அமைய வாய்ப்புள்ளது. கூட்டணி அதிமுகவுடன் இருக்கலாம், அல்லது திமுகவுடன் இருக்கலாம், அல்லது இரண்டும் இல்லாமல் கூட இருக்கலாம். எல்லாவற்றிற்கும் வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது பாஜகவில் அங்கம் வகிக்கும் கூட்டணி என்பது உறுதி. சட்டப்பேரவை தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது.” என்று கூறினார்.