அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக., அடுத்து மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைக்குமா அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைக்குமா என்ற இழுபறி நீடித்து வருகிறது. மறுபுறம் அதிமுக கட்சியில் இருந்து வெளியேறிய கருணாஸ் ஒரே நிமிடத்தில் நான்காண்டு கூவத்தூர் ரகசியத்தை உடைத்தெறிந்தார்.
முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் திமுகவுக்கு ஆதரவு மற்றும் தொகுதி கேட்டு அளித்த கடிதத்தை திரும்பப் பெறுவதாக கருணாஸ் அறிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணி பலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. மநீம, சமக, ஐஜேகே ஆகிய கட்சிகளுடன் பாரபட்சமின்றி தொகுதிகளை பகிர்ந்து மூன்றாம் அணியாக உருவெடுத்து வருகிறது. அமமுக பலமான கூட்டணி இல்லாமல் தனித்தே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாம் தமிழர் கட்சியை பொருத்தமட்டில் சீமான் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தேமுதிக இடையே தொகுதி பங்கீடுகள் குறித்து சர்ச்சையை ஏற்பட்ட போது பாஜக உள்ளே நுழைந்து சமரசம் செய்தது. ஆனால் இந்த முறை பொறுமையாக எந்த விவகாரத்திலும் பெரிதளவு தலையிடாமல் வேடிக்கை பார்த்து வருகிறது.
ஏறக்குறைய திமுகவில் தொகுதி பங்கீடுகள் முடிந்து விட்டது. திமுக அல்லாத பிற கட்சிகளில் போட்டியிடும் ஏணைய வேட்பாளர்களும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட ஒப்புக் கொண்டுள்ளனர்.
அதிமுக, பாஜகவுக்கு எதிராக இருக்கும் வாக்குகள் திமுக, மக்கள் நீதி மய்யக் கூட்டணிக்கு செல்லும் எனவும் திமுக, காங்கிரஸ்-க்கு எதிரான வாக்குகள் அதிமுகவுக்கும் திமுகவை கடுமையாக விமர்சிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் செல்லும் என கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது பிரச்சாரக் கூட்டத்தை குறைத்து வாக்குகளை சிதறடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதையெல்லாம்விட அதிமுக வாக்குகள் முன்னதாகவே அமமுக மூலம் சிதறிக்கிடப்பது கவனிக்கத்தக்க ஒன்று.
மேற்கு வங்கத்தில் நீண்ட காலமாக பிரதானமாக இருந்தது இந்தியப் கம்யூனிஸ்ட் கட்சி ஆகும். ஆனால் தற்போதைய நிலை குறித்து பார்க்கையில் திரிணாமூல் காங்கிரஸ் VS பாஜக என்ற நிலை இருக்கிறது. அதேநிலையை அடுத்த சில ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் கொண்டுவருதற்கு தான் பாஜக அமைதியாக அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என அரசியல் ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.