கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்காரணமாக நாடுமுழுவதும் பொதுபோக்குவரத்து உள்ளிட்டவைகள் முடக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தை பொருத்தவரை மாவட்டங்களுக்குள்ளான பொது போக்குவரத்து வரும் 7 ஆம் தேதி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து தெற்கு ரயில்வே, தமிழகத்தில் 7 ஆம் தேதிமுதல் மாவட்டங்களுக்கு இடையேயான சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்து இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு குறித்து பார்க்கலாம்.
சென்னையில் இருந்து கோவை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி வரையிலும் அதேபோல் கோவையில் இருந்து மயிலாடுதுறை வரையிலும் 9 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் அதேபோல் மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளில் இருந்து மறுமார்க்கமாக ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னை எழும்பூர் – செங்கோட்டை மற்றும் செங்கோட்டை – எழும்பூர் வரைக்கும், எழும்பூர் – கன்னியாகுமரி வரைக்கும் மற்றும் கன்னியாகுமரி – எழும்பூர் வரைக்கும், சென்னை எம்ஜிஆர்(சென்ட்ரல்) முதல் மேட்டுப்பாளையம் வரைக்கும் மேட்டுப்பாளையம் முதல் சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் வரைக்கும் இயக்கப்பட உள்ளது. திருச்சி- நாகர்கோவில், நாகர்கோவில்- திருச்சி வரையிலும் ரயில் சேவை இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான கொரோனா முன்னெச்சரிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விதிககளை பின்பற்றியே ரயில்கள் இயக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் பயணிகள் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும்.
டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள், அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே ரயிலில் பயணிக்கு அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் அனைவரும் முக்கவசம் அணிவது என்பது கட்டாயமாகும்.
குறிப்பிட்டுள்ள 13 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்றுகாலை 8 மணி முதல் தொடங்கப்பட்டது. ஐந்துக்கும் மேற்பட்ட மாதங்களுக்கு பிறகு ரயில்கள் இயக்கப்பட உள்ளதால், மக்கள் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.