அதிர்ந்த ட்விட்டர்: ரஜினியை ஓவர்டேக் செய்த விஜய்- ‘செல்ஃபி புள்ள’ படைத்த புதிய சாதனை!
நடப்பாண்டில் ட்விட்டரில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ட்வீட்கள் குறித்து ட்விட்டர் இந்தியா நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
2020ம் ஆண்டு முற்றிலும் வித்தியாசமானது. கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலான நாட்களை அனைவரும் வீட்டில் இருந்தபடியே கழித்துவிட்டோம். இது எல்லா துறைகளை சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும்.
இந்த சூழலில், அனைவரையும் ஒன்றிணைத்து வைத்தது சமூக வலைதளங்கள்தான். இதில், ட்விட்டர் மிகவும் முக்கியமான ஒன்று. இந்தநிலையில், நடப்பாண்டில் ட்விட்டரில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ட்வீட்கள் குறித்து ட்விட்டர் இந்தியா நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் விஜய் எடுத்துக் கொண்ட செல்ஃபி அடங்கிய ட்வீட் தான் 2020ம் ஆண்டில் இந்திய அளவில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் ஆகும். இந்தப் புகைப்படத்தை இதுவரை 1,45,700 பேர் ரீட்வீட் செய்துள்ளனர். அதேபோல 3,76,600 பேர் லைக் செய்துள்ளனர்.
குறிப்பாக, இந்த செல்ஃபி எடுக்கப்பட்ட நேரம் மிக முக்கியமானது. நெய்வேலியில் விஜய் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்தபோது, அங்கு நேரடியாக சென்று அவரை அழைத்து வந்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வருமான வரித்துறை சோதனையால் தான் சோர்ந்து போகவில்லை என்பது போல் இந்த செல்ஃபி அமைந்தது.
இதைத்தொடர்ந்து, அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதை பற்றி விராட் கோலி ட்வீட் செய்ததுதான், இந்த ஆண்டு இந்திய அளவில் அதிகம் லைக் செய்யப்பட்ட ட்வீட்டாக உள்ளது.”இப்போது நாங்கள் மூவர். ஜனவரி 2021ல் பிறக்கப் போகிறது” என்று கடந்த ஆகஸ்ட் மாதம், ட்விட்டரில் விராட் கோலி அறிவித்திருந்தார்.
இதேபோல, கொரோனாவால் பாதிக்கப்பட்டதைப் பற்றி அமிதாப் பச்சன் எழுதிய ட்வீட், அதிகம் பேரால் மேற்கோள் காட்டப்பட்ட ட்வீட்டாக உள்ளது. அரசியலை பொறுத்தவரை, விளக்குகள் ஏற்றுவது பற்றி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட ட்வீட், அதிகம் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு பிரிவில், #IPL2020, #WhistlePodu, #TeamIndia ஆகியவை அதிகம் பேர் பயன்படுத்திய ஹேஷ்டேக்குகளாக உள்ளன. பொழுதுபோக்குப் பிரிவில் #DilBechara, #SooraraiPottru, #SarileruNeekevvaru ஆகியவை அதிகம் பேர் பயன்படுத்திய ஹேஷ்டேக்குகளாக உள்ளன.
கொரோனா காலம் என்பதால், பெரும்பாலான அரசியல் தலைவர்கள், நேரடி பேட்டிகளை தவிர்த்து, ட்விட்டர் மூலமே கருத்து தெரிவித்து வந்தனர். அந்த வகையில், தனது அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் மூலம் வெளியிட்டார். விஜய்யை விட இருமடங்கு பின்தொடர்பவர்களை ட்விட்டரில் ரஜினி கொண்டுள்ளார். இருப்பினும், ரஜினியின் அரசியல் அறிவிப்பை காட்டிலும், விஜய்யின் செல்ஃபியே மக்களை அதிகம் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்க விஷயமாக உள்ளது.