வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி தொடர்ந்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதி அடிப்படை தேவை உள்ளிட்டவைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என பல்வேறு புகார்கள் முன்னிருத்தப்பட்டன.
போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு 2018 மே 28 ம்தேதி தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமும் தமிழக அரசும் உத்தரவிட்டது.
தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதுகுறித்து ஆய்வு நடத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது, அதில் ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையின்பேரில் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மறுபுறம் ஆலையை திறக்க அனுமதி கோரியும், ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் வேதாந்த நிறுவனம் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்குகளை விசாரிக்க 2019 ஜூன் மாதம் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய சிறப்பு அமர்வை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்தது.

இந்த அமர்வு விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு 2020 ஜனவரி 8 ஆம் தேதிக்கு பிறகு தீர்ப்பு வெளியிடப்படும் என தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தும் ஆலையை மூட தமிழக அரசு விதித்த உத்தரவு செல்லும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த தடை தொடரும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிறப்பித்திருக்கும் தீர்ப்பு மக்கள் போராட்டத்துக்கக் கிடைத்த வெற்றி என்று மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது 2020-ல் கிடைத்து முதல் நற்செய்தி எனவும் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது எனவும் சமூகஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.