இந்திய பெருங்கடலில் தீப்பற்றிய எண்ணெய் கப்பலில் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து மூன்றாவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குவைத்தில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு நியூ டைமண்ட் கப்பல் இந்தியா நோக்கி வந்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்றைய முன்தினம் இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென கப்பலின் என்ஜினில் தீப்பற்றி எறிந்தது. இந்த தீ கொஞ்சம் கொஞ்சமாக கப்பலின் பிற பகுதிகளிலும் பரவி ஆக்ரோஷமாக பற்றி எறியத் தொடங்கியது.
இதையடுத்து இலங்கை கடற்படையின் 4 கப்பல்களும் இலங்கையில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவின் இரண்டு போர் கப்பல்களும் கப்பல் தீப்பற்றி எறிந்துக் கொண்டிருந்த இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதேபோல் இந்திய கடற்படைக்கு சொந்தமான சமுத்ரா, சவுரியா, சரங் என்ற 3 கப்பல்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதோடு டோர்னியர் விமானமும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விமானமும் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டது. தீப்பற்றி எறிந்த கப்பலின் ஊழியர்கள் தங்கும் பகுதியில் எறிந்துக் கொண்டிருந்த தீயை இந்திய கடலோர காவல்படையினர் அணைத்தனர்.
இந்த நிலையில் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு எதுவும் ஏற்படவில்லை என இந்திய காவல்படையினர் கண்டறிந்துள்ளனர். அதுமட்டுமின்றி தீப்பிடித்த இடத்தில் தொடர்ந்து தீ பரவாமல் இருக்க குளிரூட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மூன்றாவது நாளாக தீ அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்திய தகவலின்படி தீயின் உக்கிரம் தற்போது தணிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கப்பலின் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் கப்பலில் சேதம் ஏற்பட்டால் எண்ணெய் கசிந்து கடலில் கலக்கும் அபாயமும் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது. எறிந்த கப்பலில் இருந்து 23 மாலுமிகளும், 22 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இருப்பினும் ஒருவரை மட்டும் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது அவரை தேடும்பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கப்பலில் சேதம் ஏற்பட்டு எண்ணெய் கசிவு ஏற்பட்டால் கரையில் ஆபத்து நிகழும் என்பதை கருத்தில் கொண்டு, இலங்கை கடற்கரையில் இருந்து 35 நாட்டிக்கல் மைல்களுக்கு இந்திய கடலோர காவல்படையும், இலங்கை கப்பல்களும் இணைந்து இழுத்துச் சென்றனர். இந்த பணி இருதரப்பு படையினரும் இணைந்து வெற்றிகரமாக செயல்படுத்தினர்.