பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவசாயிகள் போராட்டம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அளித்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லி எல்லையில், விவசாயிகள் 15வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுடன் மத்திய அரசு, 6 கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ள நிலையில், இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு நாடுகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், இந்திய விவசாயிகளின் போராட்டம், பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இது தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பேசிய தொழிலாளர் கட்சி எம்.பி. தன்மன்ஜீத் சிங், “இந்தியாவில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதையும், கண்ணீர் புகை குண்டுகள் வீசுவதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.
ஆனால், தங்களை தாக்கிய போலீசாருக்கு விவசாயிகள் உணவு கொடுத்து உபசரிக்கிறார்கள். இந்த விவகாரத்தில் விரைவில் தீர்வு காண இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடம், பிரிட்டன் பிரதமர் வலியுறுத்துவாரா? அமைதி வழியில் போராட அனைவருக்கும் அடிப்படை உரிமை உள்ளது என்பதை பிரதமர் ஏற்றுக்கொள்கிறாரா? ” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடக்கும் விவகாரங்கள் தொடர்பாக கவலை கொள்கிறோம். இந்த பிரச்சனைகளை இரு நாட்டு அரசுகளும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்,” என்று கூறினார். விவசாயிகள் போராட்டம் குறித்த கேள்விக்கு, சம்பந்தமே இல்லாத பதிலை பிரிட்டன் பிரதமர் தந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதைத்தொடர்ந்து, இது குறித்து விளக்கமளித்த பிரிட்டன் அரசின் செய்தித்தொடர்பாளர், பிரதமர் இந்த கேள்வியை தவறாக புரிந்து கொண்டார் என்றும், வெளியுறவு அலுவலகம் இந்தியாவில் நடைபெறும் போராட்டத்தை கூர்ந்து கவனித்து வருவதாகவும், தெரிவித்தார்.