அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர்
பரிந்துரை செய்துள்ளார்.
பாலஸ்தீனத்தை கூறு போட்டு யூதர்களுக்காக 1948 ம் ஆண்டு இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டது. நாடு தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே பாலஸ்தீனத்தை கொஞ்சம் கொஞ்சமாக இஸ்ரேல் ஆக்கிரமித்து வருகிறது. இதனால், அரபு நாடுகள் எல்லாம் இஸ்ரேலுக்கு எதிரணியில் இருந்து வருகின்றன.
இதனிடையே, இஸ்ரேலுடன் நட்பு பாராட்டும் அமெரிக்கா, அரபு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளையும் பேச்சுவார்த்தை நடத்த சம்மதிக்க வைத்தது.18 மாதங்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான அமைதி ஒப்பந்தத்தை கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி வெள்ளை மாளிகை அறிவித்தது. இந்த ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் முன்னில்லை வரும் 15ம் தேதி கையெழுத்தாகிறது.
இந்தநிலையில், 2021ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைக்கு உதவிய டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று நார்வே நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டியன் டைப்ரிங்-கெஜெடே நோபல் பரிசு கமிட்டியிடம் பரிந்துரை செய்துள்ளார்.
இதேபோல், கடந்த 2018ம் ஆண்டில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உனுடனான உச்சி மாநாட்டை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்பை நோபல் பரிசுக்கு கிறிஸ்டியன் டைப்ரிங்-கெஜெடே பரிந்துரை செய்திருந்தார். இதற்கு முன்னதாக, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு 2009ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.