பூமியின் பரப்பளவை ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அன்டார்க்டிக்கா, ஐரோப்பா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய ஏழு கண்டங்கள் மட்டுமே ஆக்கிரமித்திருந்தது. ஆனால் தற்போது புதிதாக ஒரு கண்டம் பூமிக்குள் புதைந்து இருப்பதை நியுசிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று கண்டறிந்துள்ளது. இந்த 8ஆவது கண்டம் சிலாந்தியா என்று அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் டைனோசர்களின் வாழ்விடமாக இந்த கண்டம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ஆய்வு நடத்திய நியுலாந்தின் ஜி.என்.எஸ் சயின்ஸ் ஆராய்ச்சி நிறுவனம், பல நூற்றாண்டாகளாக பூமிக்குள் மறைந்திருக்கும் சிலாந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா நிலப்பரப்பின் ஒரு பகுதியாக இருந்தது எனக் கண்டறிந்தது. மேலும் ஆஸ்திரேலியா கண்டத்தை விட மூன்றில் ஒரு பங்கு சிறியதாக இருக்கும் இந்த கண்டத்தின் 94 சதவிகித பரப்பளவு நீரில் மூழ்கியிருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இதனை உலகம் தெளிவாக அறிய நியுசிலாந்து ஆராய்ச்சி நிறுவனம் இரண்டு புதிய வரைபடங்கள் மற்றும் ஒரு ஊடாடும் வலைத்தளத்தை வெளியிட்டது. இதன் மூலம் மக்கள் வீட்டிலேயே உட்கார்ந்தபடி புதிய கண்டத்தை ஆராயலாம். இது சிலாந்தியாவின் கடற்கரையோரங்கள் மற்றும் பிராந்திய வரம்புகளைச் சித்தரிக்கும் விதமாக ஆராய்ச்சியாளர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்டம் சுமார் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் நீரில் மூழ்கியதாக ஆராய்ச்சியாளர்கள் கருதினர். ஆனால் நியூ அட்லஸ் அறிக்கையில் கண்டத்தின் ஒரு பகுதி நியூசிலாந்து மற்றும் நியூ கலிடோனியாவின் இரண்டு நீர்நிலைகளின் மேல் பரப்பில் புதைந்து கிடப்பதாகக் குறிப்பிட்டிருந்தது. இதே போல் அமெரிக்க அரசாங்க ஆராய்ச்சி நிறுவனமும், உலகின் மிகப்பெரிய டெக்டோனிக் தட்டு, சிசிலியாவின் கண்டத்தின் மேலோட்டத்திற்கு கீழே மூழ்கியதால் கண்டத்தின் ஒரு பகுதியும் மூழ்கியதாக கண்டறிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜி.என்.எஸ் சயின்ஸ் வெளியிட்டுள்ள டெக்டோனிக் வரைபடத்தின் மூலம் சிலாந்தியாவையும் பாதிமெட்ரிக் வரைபடத்தின் மூலம் கடலுக்குள் மூழ்கிக் கிடக்கும் சிலாந்தியாவின் ஒரு பகுதியையும் தெளிவாக காணலாம். இது குறித்துப் பேசிய வரைபடங்களின் முன்னணி புவியியலாளர் டாக்டர் நிக் மோர்டிமர் “நியூசிலாந்து மற்றும் தென்மேற்கு பசிபிக் பகுதியின் புவியியலின் முழுமையான மற்றும் புதுப்பித்த வரைபடத்தை உருவாக்கியிருப்பதாகவும், இதற்கு முன்பு இருந்ததை விட இந்த புதிய வரைப்படம் சிறந்ததாக இருக்கும் என்று தெரிவித்தார்.
இந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்திலுருந்தே கொரோனா வைரஸ் பாதிப்பு, பூகம்பங்கள், வெட்டுக்கிளி தாக்குதல் மற்றும் இப்போது ஒரு புதிய கண்டத்தின் கண்டுபிடிப்பு என பல்வேறு அதிர்ச்சி தகவல்களை நாம் கேட்டறிந்த வண்ணம் உள்ளோம். இன்னும் வரவிருக்கும் நாட்களில் என்ன காத்துக் கொண்டிருக்கிறது என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.