சிஎஸ்கே அணியின் மோசமான ஃபீல்டிங், அதனை சாதகாமாக பயன்படுத்தி கொண்ட தவானின் சதத்தால் டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் த்ரில் வெற்றி பெற்றது.
டெல்லி அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை. பிராவாதான் கடைசி ஓவரை வீசுவார், ரன்களை டிஃபெண்ட் செய்வார் சிஎஸ்கே வெற்றி பெறும் என எதிர்பார்த்தால் ஜடேஜா ஓவர் வீச டெல்லி வெற்றி பெற்றது! கையை விட்டு போன மேட்ச் மீண்டும் கைக்குள் வந்த போது அதை இப்படியா சிஎஸ்கே கோட்டைவிடும் என ரசிகர்கள் புலம்புகின்றனர்.
ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிட்டல்ஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அணியில் பியூஸ் சாவ்லாவுக்கு பதிலாக மீண்டும் கேதர் ஜாதவ் சேர்க்கப்பட்டார். சாம் கரன் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆனாலும் வாட்சன், டூப்ளசிஸ், ராயுடு, ஜடேஜா ஆகியோரது சிறப்பான பேட்டிங்கால் சென்னை அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழந்து 179 ரன்களை எடுத்தது.
சென்னை அணியில் வாட்சன் 36 ரன்னிலும், டூப்ளசிஸ் 58 ரன்னிலும் அவுட்டாகினர். ராயுடு 45 ரன்களிலும், ஜடேஜா 33 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி அணியில் நார்க்யா இரண்டு, துஷார் தேஷ்பாண்டே, ரபாட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
பின் 180 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கியது டெல்லி அணி. ஒருபக்கம் தொடகக் வீரர் பிரித்வி ஷா (0),ரஹானே (8), ஸ்ரேயாஸ் ஐயர் (23) அவுட்டானாலும், மறுபக்கம் தவான் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனிடையே ஜடேஜாவின் ஏழாவது ஓவரில் அவர் 25 மற்றும் 27 ரன்களிலும், பிராவோவின் 10ஆவது ஓவரில் 50 ரன்கள் எடுத்திருந்த போதும் தந்த கேட்ச்களை முறையே தீபக் சஹார், வாட்சன், தோனி ஆகியோர் தவறிவிட்டனர்.
இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தவான் ஓவருக்கு ஒரு பவுண்டரி அடித்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல தீர்க்கமாக இருந்தார். பின் 5 ஓவரில் 51 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மீண்டும் தவான் தந்த கேட்ச்சை ராயுடு கோட்டைவிட்டார். பின் அதே ஓவரில் ஒரு சிக்சர் வழங்கினாலும் அடுத்த பந்தில் ஸ்டாய்னிஸை அவுட் செய்தார் ஷர்துல் தாகூர். இரண்டு ஓவர்களில் டெல்லி அணியின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சாம் கரன் மிக அபாரமாக பந்துவீசி நான்கு ரன்களை வழங்கியது மட்டுமில்லாமல் அலெக்ஸ் கேரியின் விக்கெட்டையும் எடுத்தார். அதேசமயம் அந்த ஓவரில் கடைசி பந்தில் சிங்கிள் அடித்து தனது 57ஆவது பந்தில் சதம் விளாசினார் தவான். ஐபிஎல் தொடரில் அவர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும்.
கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுக்கக் வேண்டிய நிலையில் பிராவோ வீசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் காரணமாக அவர் களத்தில் இல்லாததால் ஜடேஜாவுக்கு ஓவர் வழங்கினார் தோனி. ஆனால் ஜடேஜாவின் ஓவரில் மூன்று சிக்சர்கள் அடித்து மேட்ச்சை ஃபினிஷ் செய்தார் அக்ஷர் படேல். டெல்லியும் 19.5 ஓவர்களில் ஐந்து விக்கெட்கள் இழந்து 180 ரன்களை எட்டி சென்னை அணியை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 14 புள்ளிகளுடன் தற்போது புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. மறுமுனையில் சென்னை அணி ஆடிய ஒன்பது போட்டிகளில் மூன்று வெற்றி, ஆறு தோல்வி என ஆறு புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.இனி ஆடும் அனைத்து போட்டிகளில் வென்றால் மட்டுமே சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது