தோத்தாலும், ஜெயித்தாலும் கடைசி வரை சண்டை செய்யனும்: ஹைதராபாத் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்திய கேகேஆர்!
கொல்கத்தா – ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சூப்பர் ஓவர் முறையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் இன்று (அக்.18) நடைபெற்ற 35ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடியது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, கொல்கத்தாவை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சுப்மன் கில், இயன் மோர்கன், தினேஷ் கார்த்திக் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சுபம்ன் கில் 36 ரன்களையும், இயன் மோர்கன் 34 ரன்களையும் எடுத்தனர்.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் – கேன் வில்லியம்சன் இணை சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் சிறப்பாக விளையாடிய வில்லியம்சன் 29 ரன்களில் ஆட்டமிழக்க, அவரையடுத்து 36 ரன்களில் பேர்ஸ்டோவ்வும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய பிரியாம் கார்க், மனீஷ் பாண்டே ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமடைந்தனர். அதன்பின்னர் அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்த டேவிட் வார்னர் இறுதி வரை அணியின் வெற்றிக்காக போராடினார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவித்தது. இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.
சூப்பர் ஓவரில் வெற்றி:
இதையடுத்து சூப்பர் ஓவரில் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் ஃபர்குசன் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஓவரின் மூன்றாவது பந்தில் சமத் 2 ரன்களோடு வெளியேறினார். இதன் மூலம் சூப்பர் ஓவரில் மூன்று ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஹைதராபாத்.
இதையடுத்து கேகேஆர் அணிக்காக இயன் மோர்கன் – தினேஷ் கார்த்திக் ஆகியோர் சூப்பர் ஓவரில் களமிறங்கினர். ஹைதராபாத் அணி தரப்பில் ரஷித் கான் பந்துவீசினார். இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சூப்பர் ஓவர் முறையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது