டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
துபாயில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசன் தொடரின் 11 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் எதிர்கொண்டது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்விகளை சந்தித்ததால் இப்போட்டியில் வெற்றிபெற நிலைக்கு ஹைதராபாத் தள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய பணித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களான கேப்டன் வார்னர், பேர்ஸ்டோ முதலில் நிதனானம் காட்டினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்த நிலையில் வார்னர் 45 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து வந்த மனிஷ் பாண்டே மூன்று ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
பின் பேர்ஸ்டோவுடன் ஜோடி சேர்ந்த வில்லியம்சன் சிறப்பாக பேட்டிங் செய்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே தடுமாறிக் கொண்டிருந்த பேர்ஸ்டோ 48 பந்துகளில் 53 ரன்களில் அவுட்டானார். பின் 26 பந்துகளில் ஐந்து பவுண்டரி உட்பட 41 ரன்கள் எடுத்திருந்த வில்லியம்சனும் ஆட்டமிழக்க ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை அடித்தது.
டெல்லி அணி தரப்பில் ரபாடா, அமித் மிஸ்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா முதல் ஓவரிலேயே புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சில் இரண்டு ரன்களில் நடையைக் கட்டி அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான், ரிஷப் பந்த் ஆகியோர் ரஷீத் கான் சுழலில் சிக்கி பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். ஹைதராபாத் அணியின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தவித்த டெல்லி அணி இறுதியில் 20 ஓவர்களில் ஏழு விக்கெட்களை இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது.
ஹைதராபாத் அணி தரப்பில் ரஷீத் கான் மூன்று விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் இரண்டு விக்கெட்டுகளும், கலீல் அஹமத் மற்றும் நடராஜன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.இதனால் இப்போட்டியில் ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி இரண்டு தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி இரண்டு புள்ளிகளுடன் ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.