ட்விட்டர் வலைத்தள பக்கத்தில் தனது ரசிகர்கள் கேட்ட அணைத்து கேள்விகளுக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் சுவாரஸ்யமான பதில்களை அளித்துள்ளார்.
அதில் முதலாவதாக, “தங்களுடைய முதல் சம்பளம் எவ்வளவு ? அதை வைத்து தாங்கள் என்ன செய்தீர்கள் என ஞாபகம் உள்ளதா ? என்று துருவ் ரூபானி என்பவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த புவனேஷ்வர் குமார், “என்னுடைய முதல் சம்பளம் 3000 ரூபாய். அதில் ஷாப்பிங் செய்தேன், இருப்பினும் சிறிது தொகையை சேமித்தும் வைத்தேன்” என்று கூறினார்.
இதற்கிடையே உங்களுக்கு பிடித்த கால்பந்து விளையாட்டு வீரர் யார்? மெஸ்ஸியா அல்லது ரொனால்டோவா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மெஸ்ஸி என்று கூறியிருக்கிறார். லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா கால்பந்து அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். கிறிஸ்டியானோ ரொனால்டோ யுவென்டஸ் அணியின் நட்சத்திர கால்பந்து வீரராக இருக்கிறார்.
மேலும், கிரிக்கெட்டை தவிர தங்களுக்கு பிடித்தமான விளையாட்டு எது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு கால்பந்து மற்றும் பாட்மிண்டன் என்று கூறியிருக்கிறார்.
இதற்கு அடுத்தபடியாக க்ருதிக் தாவ்டா என்பவர், ஐபிஎல் போட்டிகளில் தங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு தருணத்தை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த புவனேஷ்வர் குமார், 2016 ஐபிஎல் போட்டியை வென்றது மறக்கமுடியாத தருணம் என்று கூறியிருக்கிறார்.
2016 ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராப்பாத் அணியின் பந்து வீச்சாளராக விளையாடிய புவனேஷ்வர் குமார் அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றினார். அந்த போட்டியில் அரை இறுதிச் சுற்றைக் கச்சிதமாக வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னெறிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்டது. இதில் எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையைக் கைப்பற்றயிது. இந்த போட்டியில் புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்தது வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது.
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் மார்ச் 29 ஆம் தேதி முதல் தொடங்கவிருந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு புவனேஷ்வர் குமார் விளையாட இருந்தார். ஆனால் கொரோனா தொற்றுநோய் காரணமாக போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.