இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் 2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்தியா, இதுவரை இல்லாத அளவிற்கு 69 பதக்கங்களை கைப்பற்றியது. 15 தங்கம், 24 வெள்ளி மற்றும் 30 வெண்கல பதக்கங்களை பெற்று சாதனை படைத்தது.
இந்த போட்டியில் 4×400 மீட்டர் கலப்பு ஓட்டப் பந்தயத்தில், இந்தியாவை சேர்ந்த முகமது அனாஸ், எம்.ஆர். பூவம்மா, ஹிமா தாஸ், ஆரோக்கிய ராஜிவ் ஆகியோர் 3 நிமிடங்கள் 15 விநாடிகளில் எல்லையை அடைந்து வெள்ளி பதக்கம் வென்றனர். பஹ்ரைன் அணி 3 நிமிடங்கள் 11 விநாடிகளில் எல்லையை தொட்டு தங்கம் வென்றது.
இதனிடையே, பஹ்ரைன் அணியில் கலந்து கொண்ட வீரர்களில் ஒருவரான கெமி அடெகோயா ஊக்கமருந்து உட்கொண்டதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, அவருக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில், அவர் ஊக்கமருந்து எடுத்துக் கொண்டு போட்டியில் கலந்துக் கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர் போட்டிகளில் பங்கேற்க நான்கு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது. மேலும், பஹ்ரைன் அணி வென்ற தங்கப் பதக்கமும் பறிக்கப்பட்டது.
இதனால், 4×400 மீட்டர் கலப்பு ஓட்டப் பந்தயத்தில், இந்திய அணி வென்ற வெள்ளிப் பதக்கம் தங்க பதக்கமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மகளிருக்கான தடை தாண்டி ஓடும் போட்டியில் கெமி அடெகோயா பெற்ற தங்க பதக்கமும் பறிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்த போட்டியில் 4வது இடத்தை பிடித்த இந்திய வீராங்கனை அனு ராகவன் வெண்கல பதக்கம் பெற்றுள்ளார். இதன் மூலம், 2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 70ஆக அதிகரிப்பதோடு மட்டும் இல்லாமல், இந்தியா இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.