இதுவரை தோட்டக்கலைகளை நீங்கள் கையாளவில்லை என்றாலும் கவலை இல்லை. உங்கள் வீட்டு சமையலுக்குப் பயன்படுத்தக் கூடிய சிறிய வகை மூலிகைச் செடிகளிலிருந்து தொடங்கி நீங்கள் தோட்டத்தை பராமரிக்கும் பணிகளை கற்றுக் கொள்ளலாம். மூலிகைச் செடிகளை வளர்ப்பது நமது ஆரோக்கியதிற்கு நல்லது. அது போன்ற எளிதில் வளர்க்கக் கூடிய செடிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
துளசி
துளசி என்பது கோடைக்காலத்திற்கான மூலிகை வகையாகும். இதனை பானைகள், கொள்கலன்கள் உள்ளிட்டவற்றில் வளர்க்கும் போது செழிப்பாக வளரும். இதற்கு ஈரப்பதம் அதிகமுள்ள மண்ணை பயன்படுத்துதல் சிறந்தது. மேலும் இது சூரிய ஒளி குறைவாகப் படும் இடத்தில் வைப்பது செடி வளர்ச்சிக்கு நல்லது. இல்லையெனில் செடி வளர்வதற்கு அதிக நீர் தேவைப்படும். இந்த செடியில் தொடர்ந்து வளரும் இளம் காம்புகளை அவ்வப்போது அகற்றுவதன் மூலம் செடி சற்று தடிமனாக வளரும். துளசி செடியில் மொட்டு விடும் போதே அதனை கிள்ளி விட வேண்டும். இல்லையெனில் பூவாக தொழுர்த்துவிட்டால் இலைகளின் சுவை குறைந்துவிடும்.
புதினா
நீங்கள் விதைகளைக் கொண்டு புதினா செடியை வளர்க்கலாம். அப்படி இல்லையென்றால் அதற்கு பதிலாக, உங்கள்அருகிலுள்ள ஒரு நர்சரியில் இருந்து இளம் புதினா செடியை வாங்கி அதன் பின் வளர்க்க தொடங்கலாம். புதினா செடி எளிதில் படரக் கூடியது. ஆகையால் அதனை தொட்டிகளில் நட வேண்டும். இந்த செடியை சூரிய ஒளியில் அல்லது ஓரளவு நிழல் பகுதியில் வளர்க்கலாம். செடியின் நல்ல வளர்ச்சிக்கு துளிர்க்கும் மொட்டுகிளை அவ்வப்போது கிள்ளி விடுவது மிகவும் அவசியமான ஒன்று.
கொத்தமல்லி
கொத்தமல்லியை அனைத்து வகையான உணவுகளிலும் பயன்படுத்தலாம். மேலும் இந்த செடி தரையில் அல்லது கொள்கலன்களில் நன்றாக வளரும். விதைக் கொண்டு வளர்த்தால் செடியாக மாற பல வாரங்கள் ஆகலாம். இந்த செடி தொடர்ந்து நன்றாக வளர்வதற்கு இரண்டு வாரத்திற்கு ஒரு முறை அதன் விதைகளை மீண்டும் மண்ணில் விதைக்க வேண்டும். இதனை தினசரி அடிப்படையில் உபயோகித்து அவ்வப்போது அறுவடை செய்வது நல்ல வளர்ச்சிக்கும் உதவும்.
கற்பூரவள்ளி
கற்பூரவள்ளி செடியை தொட்டியில் வளர்ப்பது, அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்கும், பராமரிப்பதற்கும் எளிதாக இருக்கும். இதில் உள்ள சிறிய இலைகள் சுவை நிரம்பியது. இதனை பீஸ்ஸா மற்றும் பிற இத்தாலிய உணவுகளில் பயன்படுத்தலாம். கற்பூரவள்ளி செடிகள் சிறிய ஒளி படரும் இடங்களில் வைப்பது நல்லது. தாவரங்கள் 10 செ.மீ உயரத்தை எட்டும்போது, அதன் முனையைக் கிள்ளிவிட்டால் நேராக வளர்ந்து ஒடிந்து போகாமல் பக்கவாட்டிலும் வளரத் தொடங்கும். இது செடியின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.