அண்மையில் ப்ளூம்பெர்க் நடத்திய ஆய்வின் படி, சுமார் 4 லட்சம் விமான ஊழியர்கள் வேலை இழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் பல்வேறு விமான போக்குவரத்து நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்கிறது.
கொரோனா நோய்த் தொற்று காரணத்தால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து வெளிநாட்டு விமான சேவைகள் மட்டுமின்றி உள்ளூர் சேவைகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் தற்போது உள்ளூர் சேவைகளை மட்டும் வழங்க உத்திரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த நோய் தொற்றின் அச்சம் காரணமாக குறைந்த அளவிலான விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மேலும் பயணிகளும் பெரிதளவில் வருவதில்லை. ஆகையால் உலகளவில் கடும் சரிவை சந்தித்திருப்பது விமான போக்குவரத்து துறை மட்டுமே ஆகும்.
ப்ளூம்பெர்க் அறிக்கையின் படி பிரிட்டிஷ் ஏர்வேஸ், டச் லுஃப்தான்சா ஏஜி, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் குவாண்டஸ் ஏர்வேஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்திருக்கிறது. ஒரு சிலருக்கு சம்பளம் இல்லா விடுப்பும் வழங்கி இருக்கிறது. தினசரி அடிப்படையில் பணி புரிந்து வரும் விமானிகள் மற்றும் கேபின் குழுவிற்கு சம்பள குறைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் விமான போக்குவரத்து நிறுவனங்கள் அளித்த தகவலின் படி வேலை இழந்திருக்கும் இந்த 4 லட்சம் பேரும் விமானிகள் மற்றும் கேபின் குழு மட்டுமே. இது மட்டுமல்லாமல் விமான நிலையத்தில் பணிபுரிபவர்கள், விமான உற்பத்தியாளர்கள் மற்றும் எஞ்சின் தயாரிப்பாளர்கள் என மொத்தம் 2 கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்திருக்கக் கூடும் என சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்திருக்கிறது.