அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன. இதற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இருப்பினும், உலகமே அங்கீகரித்துள்ள ஜோ பைடனின் வெற்றியை டிரம்ப் ஏற்க மறுக்கிறார். இந்த சூழலில், டிரம்ப் ஏன் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுக்கிறார், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் போன்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.
அதிபர் தேர்தல் நடைமுறை என்ன?
அமெரிக்க ஆட்சி முறை முற்றிலும் மாறுபட்ட ஒன்று. இந்தியாவை போல் இல்லாமல், அங்கு அதிபர் ஆட்சி முறை பின்பற்றப்படுகிறது. இதில், அரசாங்கத்தின் தலைவர் அதாவது அதிபர், நாடாளுமன்றத்தில் இருந்து தனியாக இருக்கும் ஒரு நிர்வாகக் குழுவை வழிநடத்துகிறார்.
மாறாக, இந்தியாவில் பின்பற்றப்படும் நாடாளுமன்ற ஆட்சி முறையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறும் கட்சி அல்லது கட்சிகளின் கூட்டணி அரசாங்கத்தை உருவாக்குகிறது. அதன் தலைவர் பிரதமராகிறார்.
இதுமட்டுமின்றி, அமெரிக்காவில் மக்கள், அதிபருக்கு நேரடியாக வாக்களிப்பதில்லை. மாகாணங்களின் பிரதிநிதிகளுக்கே (Electoral College) மக்கள் வாக்களிக்கின்றனர். மாகாணங்களில் வெற்றி பெறும் 538 பிரதிநிதகளும் அதிபரை தேர்வு செய்கின்றனர். இதில், 270 பிரதிநிதிகள் வாக்குகள் பெற்றவரே அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
நடப்பாண்டில், வரும் டிசம்பர் 8ம் தேதிக்குள் பிரதிநிதிகள் தேர்தல் தொடர்பாக பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, அந்தந்த மாகாணங்கள் பிரதிநிதிகள் குறித்த முடிவுகளை அறிவிக்க வேண்டும். மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் வரும் டிசம்பர் 14ம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவில் அதிபரை தேர்வு செய்ய உள்ளனர். அனைத்து நடைமுறைகளும் முடிந்த பின் வரும் ஜனவரி 6ம் தேதி அரசின் அறிவிப்பு வெளியாகும். இதைத்தொடர்ந்து, ஜனவரி 20ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபர் பதவியேற்பார்.
மரபு என்ன?
அமெரிக்கா அதிபர் தேர்தலை பொறுத்தவரை பெரும்பாலான மாகாணங்களில் மக்கள் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு ஊடகங்கள் வெளியிடும் முடிவுகளை அந்நாட்டு மக்கள் அங்கீகரித்து வருகின்றனர். பொதுவாக, அரசின் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, 270 பிரதிநிதிகளை பெறும் வேட்பாளரை தொடர்பு கொண்டு தோல்வி அடைந்த நபர் வாழ்த்து கூறுவது வழக்கம். ஆனால், மரபை பின்பற்றி தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள அதிபர் டிரம்ப் மறுத்து வருகிறார். தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ஆதாரமின்றி குற்றம்சாட்டி வருகிறார்.
டிரம்பின் பிடிவாதத்திற்கு, அவரது குடியரசு கட்சியும் துணை போகிறது. குடியரசு கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும், ஜோ பைடனின் வெற்றியை ஏற்கவில்லை. இதற்கு ஒரு படி மேல் சென்று, டிரம்ப் மீண்டும் பதவியேற்பதற்கான வழிமுறைகள் சுமூகமாக அமையும் என, அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செயலாளர் மைப் பாம்பியோ தெரிவித்திருக்கிறார்.
சட்ட சிக்கல் இருக்கிறதா?
தேர்தலுக்கு முன்பே, வாக்குப்பதிவு முறைகேடு குறித்து அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார். இதன் தொடர்ச்சியாக, பல மாகாணங்களில் தேர்தல் முறைகேடு புகார் மற்றும் மறுவாக்கு எண்ணிக்கை கோரி டிரம்ப் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. ஜார்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், இவை ஜோ பைடனின் வெற்றியை பாதிக்காது என்றே கூறப்படுகிறது.
டிரம்ப் தோல்வியை ஏற்பாரா?
டிரம்பின் பிடிவாதம் அமெரிக்க ஜனநாயகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக, அந்நாட்டு அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரதிநிதிகள் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு, உண்மை வெளிச்சத்துக்கு வந்துவிடும். டிரம்பிற்கு விருப்பம் உள்ளதோ, இல்லையோ ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்பதை யாராலும் தடுக்க முடியாது என்பதே யதார்த்தம்.
Attachments area